குஜராத்தை தொடர்ந்து உ.பி.யில் போலி ஐபிஎல் தொடர்
1 min read
Mock IPL series in UP after Gujarat
12/7/2022
குஜராத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் ஐபிஎல் தொடரை போலியாக நடத்திய கும்பல் பிடிபட்டது.
போலி ஐ.பி.எல். தொடர்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள கிரிக்கெட் ஐபிஎல் தொடரை குஜராத்தில் போலியாக நடத்திய கும்பல் பிடிபட்டது. இந்த நிலையில் அதே போன்றதொரு கும்பல் உத்தரபிரதேசத்திலும் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. ரஷிய சூதாட்ட நபர்களை ஏமாற்ற குஜராத் மாநிலத்தில் உள்ள மோலிபூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 21 பேர் போலி ஐபிஎல் தொடரை நடத்தியுள்ளனர்.
அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் ஜெர்சிகளை அணிந்து கொண்டு இந்த தொடரை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் பின்னணியில் உள்ள நான்கு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. உண்மையான ஐபிஎல் விளையாட்டை போன்றே காண்பிப்பதற்காக இவர்கள் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் பேசுவதற்காக ஒருவரையும் நியமித்துள்ளனர்.
யூ டியூப் சேனல்
இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் என பெயரிடப்பட்ட இந்த போட்டிகள் யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. மேலும் அந்த மோசடி கும்பல் அமைத்த டெலிகிராம் சேனலில் ரஷிய சூதாட்டக்காரர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போன்றதொரு கும்பல் உத்தரபிரதேசத்திலும் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.’பிக்பாஸ் டி20 பஞ்சாப் லீக்’ என்ற பெயரில் மீரட் நகரில் நடத்தப்பட்டுள்ளது. ‘கிரிக் ஹீரோஸ்’ என்ற மொபைல் ஆப் மூலம் பயனர்களை சிக்க வைத்து அவர்கள் ஏமாற்றியுள்ளனர். இந்த மோசடி கும்பலின் தலைவன் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.