அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Court orders the police to file a report about what happened at the AIADMK headquarters
14.7.2022
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சீல் வைப்பு
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், எதிர்க்கட்சி அலுவலகமான அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றார். “கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளரே தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் ஆவார். ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல், அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோப்புகளை எடுத்து சென்றுள்ளனர். ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்ததை போலீசார் தடுக்கவில்லை. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஏற்கனவே மனு அளித்திருந்தோம். உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மோதலின்போது, போலீஸ் தலையிட்டதால்தான் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமைக்கழகத்தில் 11ம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.