மரத்தில் ஏறிய கைதியை வலையை விரித்து பிடித்த போலீசார்
1 min read
The police spread a net and caught the prisoner who climbed the tree
14.7.2022
மரத்தில் ஏறி போலீசாருக்கு போக்கு காட்டிய ஆயுள் தண்டனை கைதியை வலையை விரித்து பிடித்தனர்
கைதிகள்
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். ஒரு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 2016-ம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்றார். இதையடுத்து அவர் திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 2020 -ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக சுபாஷ் திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார். பின்பு பரோல் கிடைத்ததை அடுத்து அவர் ஊருக்குச் சென்றிருக்கிறார். பரோல் முடிந்த பிறகும் சுபாஷ் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவானார்.
மரத்தில் ஏறி…
போலீஸார் அவரை தேடிப்பிடித்து கைதுசெய்து, நெட்டுக்கால்தேரியில் உள்ள சிறையில் அடைத்தனர். சுபாஷுக்கு மன நோய் அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சுபாஷ் பூஜப்புரா மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
சிறையில் மதில் சுவருக்கு அருகே உள்ள அலுவலகத்தில் சுபாஷ் ஆஜராக்கப்பட்டார். அப்போது போலீஸ் பிடியிலிருந்து நைசாக தப்பித்த சுபாஷ், சிறை மதில் சுவரில் ஏறி வெளியே குதித்துள்ளார். பின்னர், போலீஸார் துரத்தியதால் சிறைக்கு வெளியே உள்ள ஒரு பெரிய மரத்தில் ஏறியுள்ளார்.
சுபாஷை அழைத்துவந்த காவலர்கள் அவரை மரத்திலிருந்து கீழே இறங்கும்படி கெஞ்சியுள்ளனர். சுபாஷ் கீழே இறங்க மாட்டேன் என்று போக்குகாட்டியுள்ளார். இதனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு தயாரானார்கள். மரத்தில் இருந்த சுபாஷ், தன் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்றும், நீதிபதியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
வலை
போலீசார் அழைத்ததன்பேரில் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்றனர். சுபாஷ் மரத்தில் இருந்து குதித்தால் காயம் ஏற்படாமல் இருக்க முதலில் மரத்தை சுற்றிலும் தீயணைப்புப்படையினர் வலை விரித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர் ஒருவர் மரத்தில் ஏறி சுபாஷை பிடிக்க முயன்றார். தீயணைப்பு வீரர் சுபாஷின் காலை பிடிக்க முயன்றபோது, சுபாஷ் மரத்தின் உச்சிக்குச் சென்றார். அப்போது மரத்தின் சிறு கிளை ஒடிந்து சுபாஷ் கீழே விழுந்தார். மரத்தின் கீழ் நின்ற தீயணைப்பு வீரர்கள் சுபாஷை வலையில் லாவகமாக பிடித்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சுமார் ஒன்றரை மணி நேரமாக சுபாஷ் மரத்தில் இருந்து அதிகாரிகளுக்கு போக்குகாட்டினார். சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதற்காக சுபாஷ் மீது வழக்கு பதிவுசெய்யவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.