59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்
1 min read
59 years old mother’s daughter from 2nd marriage
20.8.2022
59 வயது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த மகள் தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்தார்.
59 வயது தாய்
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (வயது 59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினார். இதற்காக தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று அவர் முடிவு செய்தார்.
திருமணம்
இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63) என்பவர்தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார். 2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக கூறினார் பிரசிதா. இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2-வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதை தொடர்ந்து, தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தார்.
பேட்டி
தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பிரசிதா கூறியதாவது:-
எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.