இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோர் பட்டியலில் புதுச்சேரிக்கு 3-வது இடம்
1 min read
Puducherry ranks 3rd in the list of suicides in India
5.9.2022
இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டோர் பட்டியலில் புதுச்சேரி மாநிலம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
தற்கொலை
இந்தியாவில் காதல் தோல்வி, மனநலக் கோளாறு, குடிப்பழக்கம், கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை கள் நடக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டு தோறும் காவல்துறை மூலம் பதிவு செய்த தற்கொலை வழக்குகளின் தரவுகளை சேகரித்து, தற்கொலை செய்து கொண்டோரின் விவரங்களை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக வெளியிடுகிறது.
இந்த பட்டியலானது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளார்கள் என்ற அடிப்படையில் வெளியிடப் படுகிறது. அந்த வகையில், 2021-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டோர் பட்டியலை தேசிய குற்ற ஆவணகாப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி
அதில், அந்தமான் நிக் கோபர் தீவுகள் 39.7 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. சிக்கிம் 39.2 சதவீதத்துடன் 2-வது இடத் திலும், புதுச்சேரி 31.8 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் 26.9 சதவீதத்துடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.
2021-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் ஆண்கள் – 370, பெண்கள் – 133, மூன்றாம் பாலினத்தவர் – 1 என மொத்தம் 504 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உடல்நல பிரச்சினை காரணமாக ஆண்கள் – 85, பெண்கள் – 28 என 113 பேரும், குடும்ப பிரச்சினை காரணமாக ஆண்கள் – 72, பெண்கள் – 24 என 96 பேரும், கடன் பிரச்சினை காரணமாக ஆண்கள் – 16, பெண்கள் 8 என 24 பேரும், திருமண பிரச்சினை காரணமாக ஆண்கள் – 10, பெண்கள் – 2 என 12 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது பிரச்சினை காரணமாக 4 ஆண்களும், காதல் பிரச்சினை காரணமாக 3 ஆண்களும், காரணம் தெரியவில்லை என 38 ஆண்கள், ஒரு பெண் என 39 பேரும், இதர காரணங்களாக ஆண்கள் – 142, பெண்கள் – 70, மூன்றாம் பாலினத்தவர் – 1 என 213 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இவற்றில் கடந்த 2021-ல் புதுச்சேரியில் பணியாற்றும் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்வோர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வில்லை. மாணவர்கள் – 30, மாணவிகள் – 19 என 49 பேர் தற்கொலை செய்துள்ளனர்.