May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை – சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி குற்றச்சாட்டு

1 min read

Parents are not cooperating in the death case of Smt. – CBCIT alleges in Madras High Court

27.9.2022
ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி குற்றம்சாட்டியுள்ளது.

மாணவி ஸ்ரீமதி

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்குச் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஐகோர்ட்டு இந்த வழக்கின் விசாரணையைக் கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாகவும் விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க மறுப்பதாகவும் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதைப் புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.