“ஊஞ்சல்”, “தேன்சிட்டு” ஆகிய சிறுவர் இதழ்கள்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
1 min read
“Oonchal” and “Thensittu” are children’s magazines-Released by Prime Minister M.K.Stalin
12/10/2022
“ஊஞ்சல்”, “தேன்சிட்டு” ஆகிய சிறுவர் இதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு’ என்கிற இதழையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழையும் வெளியிட்டார். குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.அதன்படி, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்கிற இதழும் மாதமிருமுறை இதழாக வெளியிடப்படுகிறது. குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இவ்விதழ்களில் வெளியிடப்படும். Also Read – கருணை அடிப்படையில் 75 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் இவைமட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறை அனுபவங்களோடும் அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடும் ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியாகவிருக்கிறது. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய மூன்று இதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி வெளியிட பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியர்களும் இதழ்களைப் பெற்றுக்கொண்டனர். மகாகவி பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் செல்வன் பா. பிரவீன் மற்றும் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செல்வி ர. சைனி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதி இளங்கவிஞர் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.