மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக தமிழ்நாடு அரசு காட்டிக் கொள்கிறது – மத்திய மந்திரி குற்றச்சாட்டு
1 min read
Tamil Nadu Govt Passes Central Govt Schemes As State Govt Schemes – Central Minister Alleges
12.10.2022
மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மாற்றி மாநில அரசின் திட்டங்களாக தமிழ்நாடு அரசு காட்டிக் கொள்கிறது என மத்திய மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
மந்திய மந்திரி
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை மத்திய இணை மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு சேலத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று காலை பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த அவர், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 2 அடுக்கு பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக மத்திய இணை மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு நிருபர்களிடம் கூறியதாவது:-
13.9 கோடி ரூபாய்
மத்திய அரசு தமிழகத்திற்கு பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை கடந்த 4 ஆண்டுகளில் 13.9 கோடி ரூபாய் அளவிற்கு நிதியினை விடுத்துள்ளது. வாழ்வாதார இயக்கத்திற்காக 1,134 கோடி விடுவித்துள்ளது. இதுமட்டுமல்லாது, மலைவாழ் மாணவர்களின் கல்வி உதவிக்காக 2021-22 ம் ஆண்டில் 540 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019- 2020 -ம் ஆண்டு முதல் இதுவரை, தமிழகத்திற்காக ஜல் சக்தி நீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு 1,678 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் 53 சதவீதம் குடிநீர் திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு 4,532 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல இதுவரை ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான நிதிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆனால் மாநில அரசு இந்த நிதிகளை முறையாக பயன்படுத்துவது கிடையாது. பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்துவதில் மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
ஜல் சக்தி திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு எந்த விதமான கட்டணமும் வசூலிப்பது கிடையாது. ஆனால் ஒரு சிலர் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைவாழ் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த மத்திய அரசு 700 பள்ளிகளை அமைக்க உள்ளது. இதில் தமிழகத்தில், 8 பள்ளிகள் அமைக்கப்படும். இந்த ஒவ்வொரு பள்ளிகளும் 500 மாணவ மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நரிக்குறவர் இனத்தை மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி குடும்ப ஆட்சியாக உள்ளது. மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மாற்றி மக்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக காட்டிக் கொள்கிறது. அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே உள்ளன. மத்திய அரசுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உரிய நிதிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு எந்த விதமான பாகுபாடும் காட்டப்படவில்லை. எனவே மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.