July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

குழந்தை திருமணம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கைது

1 min read

Child Marriage: Chidambaram Nataraja Temple Dikshitars Arrested

15.10.2022
குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் கைது செய்தனர். இதனை எதிர்த்த தீட்சதர்களும் கைதானார்கள்.

குழந்தை திருமணம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப்புகழ்பெற்ற இந்து மத கடவுள் சிவபெருமானின் நடராஜர் கோவில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த சில மாதங்களாக தீட்சிதர்கள் மீது பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, கோவிலில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு, காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.
கைது

அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்ததாக 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் குழந்தை திருமணம் செய்த மாப்பிள்ளை, தாய், தந்தை, பெண் வீட்டு தாய், தந்தை என பல்வேறு நபர்களை குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
குழந்தை திருமண வழக்கில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஹேம சபேசனை கைது செய்ததை கண்டித்தும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடனும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏ டி எஸ் பி அசோகன் மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட தீட்சிதர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேசனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலை கைவிடும்படி போலீசார் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சாலைமறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை குண்டுகட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், தீட்சிதர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, தீட்சிதர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.