May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பசும்பொன் தேவர் தங்க கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

1 min read

Madurai High Court order to hand over gold armor of Pasumbon Devar to revenue department

26.10,.2022
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசத்தை ராமநாதபுரம் வருவாய்த்துறை வசம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தங்க கசவம்

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது;-

விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பாக தங்க கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணுவித்து பின் மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.
இதற்காக அ.தி.மு.க. பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்று செல்வார்கள்.

நீக்கம்

தற்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிமுக பொருளாளராக உள்ள தனக்கே தங்க கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது.
ஆனால், வங்கி அதிகாரிகள் தங்களிடம் தங்க கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, 2022 அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க கவசத்தினை எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அதிமுக சார்பாக உபயோகப்படுத்தும் அதிகாரத்தை வழங்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

உத்தரவு

இந்த மனு நீதிபதி வீ.பவானி சுப்பராயன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, தங்கக்கவசத்தை மனுதாரர் தரப்பிடம் கொடுக்கக் கூடாது. வழக்கம் போல எங்களிடம் தான் வழங்க வேண்டும் என்றார்.
இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர் தரப்பில், நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கின்றதோ அதை பின்பற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல் வங்கி தரப்பில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது அதன் விவரம் வருமாறு:-

அதிமுக உட்கட்சி பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட இயலாது. அதிமுக சார்பில் வழங்கிய தங்கக்கவசத்தை ராமநாதபுரம் டிஆர்ஓ வங்கியில் இருந்து எடுத்துச்சென்று அணிவிக்க வேண்டும். தங்கக்கவசம் அணிவிக்கப்பட்ட பின் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கவும் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ.வுக்கு அதிகாரம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தங்க கவசத்திற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கு மட்டுமே உத்தரவு வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.