கே.ஜி.எப் 2 பாடலை பயன்படுத்திவிட்டதாக ராகுல் காந்தி மீது காப்புரிமை வழக்குப்பதிவு
1 min read
Copyright case filed against Rahul Gandhi for using KGF 2 song
5.11.2022-
பெங்களூருவை சேர்ந்த மியூசிக் நிறுவனம் ஒன்று ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது கே.ஜி.எப் 2 பாடலை பயன்படுத்திவிட்டதாக காப்புரிமை மீறல் புகார் கொடுத்துள்ளது. அதன்பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராகுல் பாதயாத்திரை
தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ‘பாரத் ஜோடோ’ என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்.டி மியூசிக் என்கிற தனியார் நிறுவனம் தான் இந்த புகாரை கொடுத்துள்ளது.
ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர். அது தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உள்பட மூவர் மீது இந்த காப்புரிமை மீறல் புகாரை கொடுத்துள்ளது. நிறைய தொகை கொடுத்து கே.ஜி.எப் 2 படத்தின் பாடல் உரிமையை தாங்கள் வாங்கி உள்ளதாகவும், அதனை தங்களது அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சியினர் தங்களது வீடியோவில் பயன்படுத்தி உள்ளதால் நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.