முதல்வருக்கு கடிதம் எழுதிய திப்பணம்பட்டி மாணவிக்கு பாராட்டு
1 min read
Kudos to the Tippanamatti student who wrote a letter to the Chief Minister
11.12.2022
தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதிய 3ம் வகுப்பு மாணவிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் திப்பணம்பட்டி ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவி கடிதம்
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவி ஆராதனா, வினைதீர்த்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரும் படி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி எழுதிய கடிதத்தை பற்றி பேசியதுடன், அப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ரூ.35.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் அறிவித்தார்.
பாராட்டு
இதையடுத்து மாணவியை தென்காசி ஆட்சியர் ஆகாஷ் தொலைபேசியில் அழைத்து பேசி, பாராட்டியதுடன், நன்றாக படிக்கும் படி அறிவுறுத்தினார். மேலும் மாணவி ஆராதனாவை திப்பணம்பட்டி ஊர் பொதுமக்களும் சால்வை அணிவித்து பாராட்டினர். ஊராட்சி மன்ற தலைவர் அருள்பாண்டி, திமுக ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் மற்றும் ராஜேந்திரன்,விஜயன், தர்மராஜ், ராஜன், முத்துகுட்டி, ராஜேஸ்குமார், ஜெயராஜ், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.