April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

புயல் மழையிலும் அணையாமல் 6-வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகா தீபம்

1 min read

The Thiruvannamalai Maha Deepam continues to burn for the 6th day even in stormy rains

11.12.2022
புயல் மழையிலும் அணையாமல் திருவண்ணாமலையில் மகா தீபம் 6-வது நாளாக இன்றும் எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறது.

கார்த்திகை மகாதீபம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 6ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தீபத்திருவிழாவை தரிசிக்க பக்தர்கள் அனும திக்கப்பட்டனர். எனவே, வரலாறு காணாத வகையில் 35 லட்சம் பக்தர்கள் தீபத்திருவிழாவை தரிசனம் செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற தீபத்திருவிழா உற்சவத்தின் தொடக்கமாக, 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடும், விழாவின் நிறைவாக 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடை பெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி தேதிவரை ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்து முடிந்தது.
தீபத் திருவிழாவின் நிறைவாக நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. அதையட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இரவு 9 மணியளவில், பஞ்சமூர்த்திகளில் ஒருவரான சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.

6வது நாளாக தீபம்

மேலும், கடந்த 6ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 6வது நாளாக இன்றும் காட்சியளித்தது. மாண்டஸ் புயல் காரணமாக மலை மீது பலத்த காற்று வீசியது. ஆனாலும், புயல் காற்றிலும் மழையிலும் தொடர்ந்து மகாதீபம் காட்சியளித்தது. மலை மீது மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும். எனவே, வரும் 16ம் தேதி வரை மலைமீது மகா தீபத்தை தரிசிக்கலாம். கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டனர். அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் 14 கி.மீ. தூரமுள்ள கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநேர் அண்ணாமலை அடிஅண்ணாமலை ஆகிய சன்னதிகளுக்கு சென்றும் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு பல்வேறு ஆன்மீக அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.