முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்
1 min read
Case against former minister Rajendra Balaji withdrawn
12.12.2022
சென்னை ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் வழக்கை திரும்ப பெற்றன.
ராஜேந்திரபாலாஜி
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவையாக இருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையுடன் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டெய்ரிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரம் இல்லாமல் பேசுவதற்கு ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்திருந்தார். பின்னர் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வாபஸ்
இந்த நிலையில் இந்த வழக்குகள் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது இந்த பிரச்சனையை கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்த்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்த வழக்கு நீதிபதி சேஷாசாயி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தனியார் பால் நிறுவனங்கள் தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு கோரிய வழக்குகளை திரும்ப பெற அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறார்.