பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
1 min read
Tribal Constitution Amendment Bill passed in Lok Sabha
15.12.2022
பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும்
நரிக்குறவர் சமூகம்
தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.
பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது. இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பழங்குடியின நலத்துறை மந்திரி அர்ஜீன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார்.
நிறைவேறியது
இந்த நிலையில், பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் – குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.