May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆன்லைன் சூதாட்டத்தில் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை

1 min read

Online gambling graduate commits suicide by jumping into well

28.12.2022
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பட்டதாரி வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி, கருமாங்கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (வயது 24). பி.காம். பட்டதாரி. இவரது தந்தை சங்கர் இறந்துவிட்டார். இதனால் தாயார் விஜயலட்சுமியும், அருண்குமாரும் கருமாங்கிணற்றில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி அருண்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் தாயார் விஜயலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் அருண்குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண்குமாரை தேடி வந்தனர். கிணற்றில் உடல் இதற்கிடையே கருமாங்கிணற்றில் உள்ள ஊர் பொது கிணற்றில் நேற்று மாலை அருண்குமாரின் உடல் மிதந்தது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கள்ளிமந்தையம் போலீசார் மற்றும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படைவீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள், கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டம்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அருண்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி தனது மகனுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த செல்போனை உபயோகப்படுத்தி வந்த அருண்குமாருக்கு, ஆன்லைன் சூதாட்டம் மீது நாட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் அருண்குமாருக்கு பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் ரூ.1,000, ரூ.2,000 என கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை இழந்து வந்தார். இதையடுத்து விட்ட பணத்தை மீண்டும் பிடிக்க அதிக தொகையை வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ரூ.50 ஆயிரத்தை அருண்குமார் இழந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை இதுகுறித்து அறிந்த தாய் விஜயலட்சுமி மற்றும் நண்பர்கள், அருண்குமாரை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அருண்குமார் சம்பவத்தன்று ஊர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.