குழந்தைகள் மாறியது; ஆண் குழந்தைக்கு அடம்பிடிக்கும் அம்மாக்கள்
1 min readChildren changed; Mothers doting for a baby boy
31.12.2022
பிறந்தவுடன் குழந்தைகள் மாறியதனால் ஆண் குழந்தை தனக்கு பிறந்தது என்று அம்மாக்கள் போராடுகிறார்கள். இதனால் 2 குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவில்லை.
குழந்தைகள்
தெலுங்கானா மாநிலம் மாஞ்செரி அரசு ஆஸ்பத்திரியில் பவானி மற்றும் மம்தா ஆகிய 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 27-ந்தேதி இரவு இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தன.
அவசரக்கதியில் குழந்தைகளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். அப்போது யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பதிவு செய்ய மறந்து விட்டனர். மேலும் சிகிச்சை முடிந்ததும் எந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்பது தெரியாமல் திணறினர்.
இது பற்றி குழந்தைகளின் தாயாரிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கேட்டு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக 2 தாய்மார்களையும் அழைத்து உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என கேட்டுள்ளனர்.
குழப்பம்
அப்போது 2 தாய்மார்களும் தங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறந்தது என தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கவே இல்லை என உறுதியாக கூறினர். இதனால் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்ற ஆஸ்பத்திரி ஊழியர்கள். 2 குழந்தையையும் மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆண் குழந்தையின் தாய் யார் என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
ஆண் குழந்தையின் தாய் யாரென்று தெரியாததால் 2 குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவில்லை. ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு உணவளித்து வருகின்றனர். குழந்தைகளின் தாய்மார்களும் ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு காரணமான ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.