May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்-சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

1 min read

Demonetization action to go-Supreme Court sensational verdict

2.1.2023
பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ந்தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனக் கூறி எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர். இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அவர்கள் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திரும்ப பெறுங்கள் என்று இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை. ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில்தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசை குறை கூற இயலாது. மத்திய அரசின் நடவடிக்கை உரிய முறையில் இருப்பதால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த 58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும். மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. இந்த நடவடிக்கையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பதை விசாரிப்பது பொருத்தமானது அல்ல. அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி தருகிறது. எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படமாட்டாது. மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏனோதானோ வென்று உடனடியாக திடீரென்று எடுக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவுடன் சுமார் 6 மாதங்கள் மத்திய அரசு ஆய்வு செய்திருக்கிறது. போதுமான ஆய்வுகளை செய்த பிறகுதான் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது. காரணமே இல்லாமல் பண மதிப்பிழப்பு செய்து உள்ளனர் என்று சொல்வதை ஏற்க இயலாது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது
இந்நிலையில், பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து நீதிபதி பி.வி.நாகரத்னா வழங்கிய தீர்ப்பில் ரிசர்வ் வங்கி சட்ட விதிகளின்படி, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியம் தேவையென்றால் அவசர சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கலாம். நாடாளுமன்றம் என்பது இன்னொரு வடிவம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.