தைப்பொங்கிலின் சிறப்பும் பொங்கல் வைக்கும் நேரமும்
1 min readSpeciality of Thai Pongal and Timing of Pongal
13/1/2023
தைபொங்கல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இது ஒரு சிறப்பான நாள். காரணம் பொங்கல் என்றாலே சூரியனை வழிபடும் நாள். ஞாயிறு என்பது சூரியனுக்கு உகந்த நாள்.
தமிழர் திருநாளாம் இந்த பொங்கல் நாளை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக கொண்டாட-வேண்டும். இது நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கும் உலகை காக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா. வானசாஸ்திர ரீதியாக கூட இந்த நாள் மிக முக்கியமான நாள் ஆகும்.
சூரியனின் பாதை
சூரியன் தட்சிணாய காலத்தை முடித்து உத்தராண்ய காலத்திற்கு அடியெடுத்து வைக்கும் நாள். அதாவது சூரியன் தென்கோடியில் இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாள்.
தட்சிணாய காலத்தின் இறுதிபகுதி மோசமான காலம் ஆகும். இந்த காலத்தில்தான் அதிக நோய் தாக்குதல்கள் இருக்கும். அவை அனைத்தும் தீர்ந்து இந்த தை மாதம் முதல் நாம் சுபீட்சம் பெறலாம். அதனால்தான் தைபிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னார்கள்.
சூரியன் மகர ராசியில் இருக்கும் காலம் தான் தை மாதம். இந்த ராசியல் நுழையும் முதல்நாள் தைப் பொங்கல். இந்த ஆண்டு வளர்பிறை அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் செவ்வாய் ஓரையில், மேஷ லக்கினத்தில் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார்.
பொங்கல் வைக்கும் நேரம்
தைத்திங்கள் 1-ம் நாள் (15-1-.2022) ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.45 மணி முதல் 8.45 மணிரை பொங்கல் வைக்க உதகந்த நேரம். சிலர் சூரிய உதயத்திற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அவர்கள் நேரம் பார்க்க வேண்டியது இல்ல. சில கிராமங்களில் மாலையில் பொங்கல் வைக்கும் வழக்கம் இருக்கும். அவர்கள் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம்.
பொங்கலின்போது புது அடுப்பு அமைத்து பொங்கல் புது பானையை அல்லது புது பாத்திரத்தை வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மஞ்சள் கொத்தில் உள்ள பச்சை மஞ்சள் கொம்பை எடுத்து நூல் கயிற்றில் கங்கணமாக கட்டி புஷ்பம் வைத்து பொங்கல் பாத்திரத்திற்கு கட்டி அவரவர்கள் சம்பிரதாய முறைப்படி அமைத்து பொங்கல் செய்யவும்.
பசும் சாணியில் சிறிய மேடை சாணியை அமைத்து கோலம் போட்டு செம்மண், குங்குமம் இட்டு பசும் சாணியில் இரு பிள்ளையார் செய்து மேடையில் வைத்து புஷ்பம், தும்பம் பூ, சிவப்பு பூசணி பூ, அருகம்புல், அலரி பூ இவைகளால் பிள்ளையாரை அலங்கரித்து அவர் எதிரில் சாணியில் பள்ளமாக அமைத்து, பால், தயிர், நெய், வாழைப்பழம், தேன் விட்டு அமைக்கவும். கரும்பு, மஞ்சள் செடிக்கொத்து, சிவப்பு பூசணி பத்தை,கிழங்குவகை, வள்ளிக் கிழங்கு, மொச்சைக்காய், அவரைக் காய், பழ வகை இவைகளை வைத்து சூரிய பகவான் கோலம் போட்டு புதிய செம்மண் இட்டு இரு குத்து விளக்கு ஏற்றி சூரிய பகவானுக்கு பூஜை செய்ய வேண்டும். அப்போது கற்பூரம் தீபாராதனை செய்து சாம்பிராணி தூபம் போட்டு பல வகையாக நெய்வேத்தியங்கள் வைத்து 3 தடவை பிதட்சண சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து பொங்கலோ பொங்கல் என்று 3 தடவை பயபக்தியுடன் கூறவும்.
பூஜை முடிந்தவுடன் பசுவுக்கு (அல்லது) காளைக்கு முதலில் வாழை இலையில் பொங்கல் பிரசாதம் வைத்து பின்னர் சாப்பிடவும். பின்னர் தங்கள் குல தெய்வத்தையும், மறைந்த முன்னோர்களை நினைத்து காகத்திற்கு பிரசாதம் வைக்க வேண்டும். அதன் பின்னரே குடும்பத்தினர் பொங்கல் சாப்பிட வேணடும்.