பஞ்சாப்பில் பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்
1 min read
Congress MP who participated in Padayatra in Punjab Death by heart attack
14/1/2023
பஞ்சாப்பில் இன்று காலை ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் இறந்தார். அவருக்கு ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.
ராகுல் பாதயாத்திரை
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் 7-ந்தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் நடைபயணம் செய்த பிறகு ராகுல் காந்தி கடந்த 10-ந்தேதி பஞ்சாப்பை சென்றடைந்தார்.
அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். சோனியா காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின் போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். பஞ்சாப் யாத்திரையின் போது ராகுல்காந்தி பொற்கோவிலுக்கு சென்றார்.
வட மாநிலங்களில் கடும் பனி இருந்து வருகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் அவருடன் சென்று உற்சாகப்படுத்தி வந்தனர்.
எம்.பி. மரணம்
இந்த நிலையில் பஞ்சாப்பில் இன்று காலை ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76. ஜலந்தர் அருகே உள்ள பிலாப்பூர் பகுதியில் ராகுல் காந்தி நேற்று காலை நடைபயணத்தை தொடங்கினார். அவருடன் ஜலந்தர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார். நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அஞ்சலி
அவரது மறைவால் பஞ்சாப் காங்கிரசார் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
சந்தோக்சிங் சவுத்ரி 1946-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி பஞ்சாப் மாநிலம் ஜலநகர் மாவட்டம் காலிவால் பகுதியில் பிறந்தார். வக்கீலான அவர் பஞ்சாப் காங்கிரஸ் மந்திரி சபையிலும் இடம்பெற்று இருந்தார். 2014 பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.
ஒத்திவைப்பு
இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் மறைவை தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.