April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு: 6 பேர் காயம்

1 min read

Twin blasts in Jammu: 6 injured

21.1.2023
ஜம்முவில் இன்று காலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டு வெடிப்பு

ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் இன்று காலையில் அடுத்தடுத்து 2 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரைவழைக்கப்பட்டனர். அவர்கள் குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு

குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.

இந்த நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் யார் என்று தெரியவில்லை. எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. குடியரசு தினத்துக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஜம்மு- காஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ராகுல் யாத்திரை

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மராட்டியம், டெல்லி, பஞ்சாப், அரியானா என பல மாநிலங்களையும் கடந்து தற்போது காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது.
ஜம்முவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததையடுத்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. ஜம்முவில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சத்வால் என்ற இடத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டார். உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் கேட்டு கொண்டார்.

இந்த சூழலில், காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்ததுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, காஷ்மீர் துணை நிலை கவர்னரை நான் சந்தித்து பேசினேன். காஷ்மீரில் உள்ள எங்களுடைய அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது என்பது அவர்களுடைய பொறுப்பு. என்ன நடந்தபோதும், இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.