May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

எடப்பாடி பழனிசாமி அணியின் நடவடிக்கையால் பாஜக கலக்கம்

1 min read

Edappadi Palaniswami team’s move upsets BJP

2.1.2023
எடப்பாடி பழனிசாமி அணியின் பேனரால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.

ஈரோடு தேர்தல்

அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டது பாரதீய ஜனதாவுக்குதான் பிரச்சினை ஆகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்தால் அதன் மூலம் தி.மு.க.வை எளிதாக எதிர்க்கலாம் என்று திட்டமிட்டது. மேலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களை பெறலாம் என்று கருத்தியது. ஆனால் அவர்கள் இணைவதற்கான சாத்திய கூறு எதுவும் இல்லை.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியையும் நிர்ணயிக்கும் தேர்தலாகி விட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார்கள். பா.ஜனதா யாருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது.
இரு அணிகளும் இணைய வேண்டும். அல்லது நாங்கள் போட்டியிடுகிறோம். நீங்கள் ஆதரியுங்கள் என்று பா.ஜனதா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். பா.ஜனதாவின் முடிவுக்கு காத்திராமல் வேட்பாளர் அறிவிப்பு, பணிமனை திறப்பு என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்றனர்.

பேனர்

தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்ட பேனரில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அறிவிப்பு பளிச்சிட்டது பலரது புருவங்களை உயர்த்தியது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று தான் பெயர். கூடுதலாக ‘முற்போக்கு’ என்ற வார்த்தையை இணைத்து பேனர் வைக்கப்பட்டது.

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பு வரை பிரதமர் மோடி படம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் தான் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று தான் அதிரடியாக மோடி படம் இல்லாமல் கூட்டணி பெயரையும் மாற்றி புதிய பேனர் வைக்கப்பட்டது.

கலக்கம்

எடப்பாடி பழனிசாமி கொடுத்த இந்த அதிர்ச்சி வைத்தியத்தால் பா.ஜனதா கலங்கிப்போய் விட்டது. தகவல் அறிந்ததும் பா. ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. மேலிட தலைவர்களுடன் போனில் பேசி இருக்கிறார். அப்போது தனது அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து நேற்று மாலையில் அந்த பேனரில் முற்போக்கு என்பது கருப்பு ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி என்று இடம்பெற்று இருந்தது.

மோடி படம் இல்லை

பின்னர் இரவோடு இரவாக புதிய பேனர் தயார் செய்து வைக்கப்பட்டது. அதிலும் மோடி படம் இடம் பெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக ‘அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் இன்னும் நீங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய கட்சியாக இருக்கலாம் அதற்காக காங்கிரசை தி.மு.க. தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் எங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி பணியமாட்டார். எங்களை பொறுத்தவரை பா.ஜனதா கூட்டணியை விரும்புகிறோம். அதேநேரம் எங்கள் பந்து பா.ஜனதாவிடம் இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்தே எங்கள் முடிவும் அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டணியை கைவிடவும் தயார் என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பது பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டெல்லிக்கு…

இந்த நிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா, சந்தோஷ் ஆகியோரை சந்தித்து தற்போதைய நிலவரம் பற்றி விளக்க உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமை எடுக்கும் முடிவை தொடர்ந்து நாளை (3-ந்தேதி) தமிழக பா.ஜனதா முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.