May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

‘நீட்’ விலக்கு பெறுவதே லட்சியம்- ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read

The aim is to get ‘NEET’ exemption – Chief Minister M.K.Stal’s speech in Erode election campaign

25.2.2023
‘நீட்’ விலக்கு பெறுவதே லட்சியம் என்று ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலின் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சம்பத் நகரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-
சொல்லின் செல்வன் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் மகனுக்கு கலைஞரின் மகன் ஓட்டு கேட்டு வந்து இருக்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தம்பி திருமகன் ஈவெராவை வெற்றி பெற வைத்தீர்கள். 46 வயதே ஆன அவர் தீவிரமாக மக்கள் பணி, கட்சி பணி ஆற்றி வந்தார். திடீரென அகால மரணம் அடைந்தார். தந்தை இறந்த அந்த இடத்தை பூர்த்தி செய்ய மகன் வருவார். ஆனால் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை மகன் இருந்த இடத்தை பூர்த்தி செய்ய அவரது தந்தை வந்து உள்ளார். எனவே அவருக்கு மாபெரும் வெற்றியை தர வேண்டும்.

சாதனை

தி.மு.க. 2 ஆண்டுகால சாதனைகளை மிகப்பெரிய பட்டியலாக சொல்லலாம். அதற்கு குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டும் சொல்கிறேன். தி.மு.க.வை பொறுத்தவரை 5 முறை கலைஞர் ஆட்சி செய்து உள்ளார். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது கலைஞர் 2 முக்கியமான விசயத்தை சொல்வார். சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்பார். அதை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அவரது மகன் ஆகிய நான் சொல்வதை செய்வேன். செய்வதை சொல்வேன். சொல்லாததையும் செய்வேன்.
மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். நான் ஆட்சி பொறுப்பேற்ற உடன் 5 கையெழுத்து இட்டேன். அதில் ஒன்று மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இந்த திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள். கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், உறவினர் வீட்டுக்கு செல்லும் பெண்கள் மகிழ்ச்சியாக செல்கிறார்கள். இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வேறு குடும்ப செலவு செய்கிறார்கள். இந்த திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது.
காலை உணவு

அடுத்ததாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம். நான் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது மாணவர்கள் சோர்வாக இருந்தனர். அவர்களிடம் கேட்ட போது காலை உணவு சாப்பிடவில்லை என்றனர். 80 சதவீத மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வந்ததை கேட்டு நான் வேதனை அடைந்தேன். இதையடுத்து அதிகாரிகளிடம் இது பற்றி பேசி முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தினோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது.
அடுத்ததாக விவசாய மக்களுக்கு உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1989-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். எதற்காக என்றால் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டி, அதுவும் ஒரு பைசா குறைக்க வேண்டி. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 1989-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது சட்டமன்றத்தில் யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் நீங்கள் ஒரு பைசா குறைக்க வேண்டி போராடி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பைசா கூட தரவேண்டாம். உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார். அதனை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகத்திலே இல்லாத அளவிற்கு சென்னையில் நடத்தினோம். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கோரிக்கை பெற்று அதை நிறைவேற்றி தர வேண்டும் என்பதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
இன்னுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் பெயரில் சமத்துவபுரம் திட்டம், உழவர் சந்தை, அரசின் முன்மாதிரி பள்ளி, பத்திரிகையாளர் நல வாரியம், எழுத்தாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, பேராசிரியர் பெயரில் பள்ளிகள் மேம்பாட்டு திட்டம், காமராஜா் பெயரில் கல்லூரிகள் மேம்பாட்டு திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாட அறிவிப்பு, அதே நாளில் உறுதிமொழி எடுக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து நிறைவேற்றி வருகின்றோம். வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்திருக்கின்றோம். அன்னை தமிழில் அர்ச்சனை, பெரியார் நினைத்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை திராவிட மாடல் ஆட்சி நீக்கி இருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கின்றேன்.

நீட் விலக்கு

நீட் விலக்கு பெற்றே தீர்வோம் என்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இது எங்கள் லட்சியம். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யவில்லை என சொல்லி வருகிறார். அவருக்கு தெரியவில்லை என்றால் கண் மருத்துவரை பார்த்து பரிசோதிக்க வேண்டும். அல்லது பேசிய பேச்சையாவது கேட்டு பார்க்க வேண்டும். உண்மையா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். 85 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கின்றோம். மீதமுள்ள வாக்குறுதிகளை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவேன்.
நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன். பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை நிதிநிலை ஒழுங்காக இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி இருப்போம். கஜானாவை காலியாக மட்டுமல்லாமல் கடன் வைத்து சென்றார்கள். அதனை சரி செய்து வருகின்றோம். அவை சரி செய்யப்பட்டவுடன் உறுதியாக வருகிற மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கையில் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு எப்பொழுது வழங்கப்படும் என்பதை அறிவிக்க இருக்கின்றோம். இது எடப்பாடிக்காக சொல்லும் வார்த்தை அல்ல. ஸ்டாலின் சொல்லும் வார்த்தை. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் சொன்னதை செய்வோம், செய்ததை சொல்வோம். சொல்லாததையும் செய்வோம். இது மக்களுக்காக பாடுபடக்கூடிய ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். இந்த இடைத்தேர்தல் ஒரு எடை தேர்தலாக பார்க்க வேண்டும். இந்த ஆட்சி எப்படி இருக்கிறது? என்ன செய்திருக்கிறது? தேர்தல் நேரத்தில் சொன்னதை செய்திருக்கிறார்களா? முறையாக இந்த ஆட்சி நடக்கிறதா என்பதை எடை போட்டு நீங்கள் வழங்க வேண்டிய தீர்ப்பு வழங்க தயாராக இருக்கிறீர்கள். திருமகன் ஈவேரா கடந்த தேர்தலில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், உதயநிதி ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டு சென்றார், ஆனால் நான் கேட்கிறேன். அ.தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு தேவை. அந்த வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும். சத்தியமாக, உறுதியாக, நிச்சயமாக இதை நீங்கள் செய்வீர்களா?
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.