April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

மதுபான கொள்கையில் ரூ.100 கோடி ஊழல்: மணீஷ் சிசோடியா கைது

1 min read

Rs 100 crore scam in liquor policy: Sisodia arrested

27.2.2023
மதுபான கொள்கையில் ரூ.100 கோடி ஊழல்: சிசோடியா கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து ஆம்ஆத்மி டெல்லியில் போராட்டம்

ரூ.100 கோடி ஊழல்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகர ராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துணை முதல் மந்திரி

கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

கைது

இந்த நிலையில் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் நேற்று மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை. அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார்.
இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அறிவித்தனர். இரவு முழுக்க அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டார். இரவு உணவும் அவருக்கு அங்கேயே வழங்கப்பட்டது. இன்று காலை அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் வழங்கினார்கள்.

இதையடுத்து மணீஷ் சிசோடியா மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவரை இன்று பிற்பகல் சி.பி.ஐ. கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர். மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மணீஷ் சிசோடியா மதுபானக்கொள்கையில் திருத்தம் செய்து பலகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் தகவல்கள், செல்போன் உரையாடல் பதிவுகள், இ-மெயில்கள் மற்றும் செயலாளர் அரவிந்த் வாக்குமூலம் ஆகியவை மணீஷ் சிசோடியா ஊழல் செய்ததற்கு ஆதாரங்களாக உள்ளன என்று சிபி.ஐ. தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டம்

மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சி.பி.ஐ. அலுவலகம் முன்பும், பா.ஜ.க. அலுவலகம் முன்பும் ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்த திரண்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர் போராட்டம் நடத்த பா.ஜ.க. தொண்டர்களும் குவிந்தனர். இதனால் டெல்லியின் பல பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அலுவலகம், பா.ஜ.க. அலுவலகம் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.