வேலைக்கு சென்றதால் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது
1 min read
2 people arrested for attacking North State workers for going to work
14.3.2023
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள்
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் ஓடையில் பொதுப்பணித்துறை சார்பில் பாலம் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை நாமக்கலை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது.
இந்த கட்டுமான பணிகளில் உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 35 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 24 நபர்கள் வெளி மாநிலத்தவர்கள் ஆவார்கள்.
மது அருந்திவிட்டு…
இந்நிலையில் கடந்த வாரம் உள்ளூரை சேர்ந்த கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (26), மணிகண்டன் (27) ஆகிய இருவரும் இந்த கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
ஆனால் ஸ்ரீகாந்த், மணிகண்டன் இருவரும் வேலைக்கு சரிவர வராமல் இருந்துள்ளனர், அப்படியே வேலைக்கு வந்தாலும் மது அருந்தி வந்துள்ளனர்.
இதனால் கட்டுமான நிர்வாகம் ஸ்ரீகாந்த், மணிகண்டன் இருவரையும் பணிக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டது.
தாக்குதல்
இந்நிலையில் நேற்று இரவு கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள கிராம நூலகம் அருகேயுள்ள மளிகை கடைக்கு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிப்லாப் மற்றும் அனிபா சிங்கா இருவரும் மளிகை பொருட்கள் வாங்க சென்று உள்ளனர்.
அப்போது அங்கே வந்த ஸ்ரீகாந்த் மற்றும் மணிகண்டன் இருவரும் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளூரை சேர்ந்த நாங்களே வேலை செய்யாத போது நீங்கள் வெளிமாநிலத்தவர் நீங்கள் எப்படி இங்கே வேலை செய்ய வரலாம் என்று வம்பு இழுத்து பிப்லாப்-ஐ ஸ்ரீகாந்த் கன்னத்தில் அறைந்து உள்ளார். இதனை தடுத்த அனிபாவை மணிகண்டன் தாக்கியுள்ளார்.
இதனால் பிப்லாப் மற்றும் அனிபா இருவரும் சத்தமிட்டதில் அருகே கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வரும் முனிசாமி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தடுத்தனர். அப்போது ஒருவரின் விரலை ஸ்ரீகாந்த் கடித்து உள்ளார்.
ஸ்ரீகாந்த், மணிகண்டனுக்கு ஆதரவாக வந்த அதே பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவரும் சேர்ந்து கொண்டு தாக்கினார்.
பின்னர் மணிகண்டன், ஸ்ரீகாந்த், பிரதாப் மூவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் முனுசாமி, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிப்லாப், அனிபா மற்றும் மாரியப்பன் ஆகியோர் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கைது
இது குறித்துமுனிசாமி கொடுத்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் ஸ்ரீகாந்த் மற்றும் மணிகண்டன் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பிரதாப்பை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வட மாநில தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.