ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்
1 min read
Former Chief Minister of Andhra Pradesh Kiran Kumar Reddy joins BJP
8.4.2023
ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். அவர் பாஜக எழுச்சியடையும் வேளையில், காங்கிரஸ் மெல்ல வீழ்ச்சி அடைந்து கொண்டே வந்து விட்டது என கூறினார்.
கிரண் குமார் ரெட்டி
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வராக பணியாற்றியவர் கிரண்குமார் ரெட்டி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நேற்றுடெல்லியில் பாஜக தலைமை கட்சி அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதன் பின்னர் கிரண்குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது, ஏழ்மையை ஒழிக்க பாடுபடுவதை கண்டு நான் பாஜகவில் இணைந்தேன். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கடைநிலை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கடும் உழைப்பால்தான் பாஜக இந்த உச்சத்தை தொட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸில் இதுபோன்ற நிலை இல்லை. நாட்டு பிரச்சினை மட்டுமல்ல, கட்சி பிரச்சினைகளை கூட ஒன்று கூடி விவாதிக்க காங்கிரஸில் வழியில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பேச்சை, கட்சி மேலிடம் கேட்பதில்லை. அதனால்தான் 60 ஆண்டுகால காங்கிரஸுடனான பந்தத்தை உதறி பாஜகவில் இணைந்துள்ளேன்.
காங்கிரஸின் தவறான முடிவுகளால்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதே நிலைதான் ஆந்திராவிலும் உள்ளது. மாநில பிரிவினை மேற்கொண்ட பின்னர், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. மத்தியிலும் யார் தலைமையில் காங்கிரஸ் உள்ளது என்பது புரியாத நிலைதான் தற்போதும் உள்ளது. பாஜக எழுச்சி அடைந்து கொண்டே உள்ளது. அதேசமயம் காங்கிரஸின் வீழ்ச்சிப் பயணம் தொடர்கிறது. பிரச்சினைகளை அலசி அதற்கான தீர்வுகளை உடனடியாக பெற காங்கிரஸ் தவறிவிட்டது.
நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள். ஆதலால், அவர்களின் பாதையில் பயணிக்க முடிவெடுத்து பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு கிரண்குமார் ரெட்டி கூறினார்.