கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட வில்லை-தென்காசி கலெக்டர் பேட்டி
1 min read
Mineral resources not smuggled to Kerala – Tenkasi Collector Interview
8.4.2023
கேரளாவுக்கு செல்லும் கனிமவளங்கள் பற்றி புளியரை சோதனை சாவடியில் தென்காசி கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர். அப்போது தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் கடத்தப்படவில்லை என்று கலெக்டர் கூறினார்.
கனிமங்கள்
தென்காசி மாவட்டம் புளியரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாம்சன், கனிமவள கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் காவல்துறையினர் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து புளியரை சோதனைச் சாவடியில்
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
கனிமங்கள் கடத்தல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தது தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தல் நடைபெறுவதாக தொடர் போராட்டங்களை பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை அடுத்து தமிழகத்தின் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை புளியரை சோதனை சாவடியில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றி சென்ற 13 வாகனங்களில் அதிக எடை இருந்ததாக 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்படி தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கனிம வளங்கள் கூடுதலாக ஏற்றி செல்லும் வாகனங்களை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
சோதனை
இந்நிலையில் திடீரென தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன்,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் கனிமவள கடத்தலுக்கு தடுக்க நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் காவல்துறையினர் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் வைத்து சோதனை செய்தனர்.
மேலும் கனரக வாகனங்களில் .கொண்டு செல்லப்படும் கனிமங்களின் அளவுகள் மற்றும் அனுமதி சீட்டுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.
கடத்தல் இல்லை
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் புளியரை சோதனை சாவடி வழியாக கேரள மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படவில்லை என்றும் வாகனங்களில் நிர்ணயத்த அளவைவிட அதிகப்படியான அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வருவாய்த்துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் மாவட்ட காவல் துறையினர் ஆகிய மூன்று படிநிலைகளில் சோதனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
போலி எடை சீட்டுகளுடன் கனரக வாகனங்கள் கேரளா செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று கேட்டதற்கு தற்போது தென்காசி மாவட்டத்தில் மூன்று எடை நிலையங்களில் எடையிடப்பட்டு செல்கிறது. தேவைப்படும் அந்த எடைநிலையங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார்
39 குவாரிகளுக்கு அனுமதி
மேலும் தென்காசி மாவட்டத்தில் 39 கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் புளியரை சோதனைச் சாவடி வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மேற்படி குவாரிகளில் இருந்து அனுப்பப்படுகிறது. என்றும் தெரிவித்தார்.
குடிநீர் குழாய் உடைப்பு
கடையம் பகுதிகளில் கனிம வளம் ஏற்றி செல்லக்கூடிய கனரக லாரிகள் குடிநீர் குழாய்களை சேதப்படுத்துவது, பொதுமக்கள் சிறை பிடிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது எந்த வாகனங்கள் மேற்படி சேதத்தை விளைவிக்கிறதோ அந்த குவாரியின் உரிமையாளர்களுக்கு சேதப்படுத்தியதை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கடையம் வழியாக வரக்கூடிய வாகனங்களில் 2 குவாரிகள் மட்டுமே தென்காசி மாவட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி தனது தொகுதியான தமிழக கேரள எல்லை புளியரை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் அதிக அளவில் ஏத்தி செல்வதாகவும்,சட்டசபையில் கனிமவளங்கள் கடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெரிய கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவ்வாறு பெரிய கனரா வாகனங்கள் சென்றால் அந்த வாகனங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்
.இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது அதற்கு கலெக்டர் பதிலளிக்க வில்லை.
கூடுதல் நேரம்
தொடர்ந்து தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கனிம வள வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துரை இரவிசந்திரன் தெரிவித்தார்.
கேரளாவை போல தமிழ்நாட்டிலும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதை மாற்றி அமைக்க முடியுமா என அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்து வருவதாக கூறினார்.
-முத்துசாமி, நிருபர், தென்காசி.