ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
1 min read
Trinamool Congress MLA in teacher appointment scam case Arrest
17.4.2023
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் நியமன ஊழல்
மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதில் 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக பார்த்தா சாட்டர்ஜி செயல்பட்ட போது ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி வீட்டிலும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் அர்பிதா வீட்டில் ரூ.20 கோடி சிக்கியது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது
மேலும் இந்த வழக்கில் மாணிக் பட்டாச்சார்யா எம்.எல்.ஏ.வை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த நிலையில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜிபன் கிருஷ்ணா சஹாவிடம் கடந்த 14-ந்தேதி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். முர்ஷிதா பாத் மாவட்டம் பர்வானில் உள்ள இல்லத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் ஜிபன் கிருஷ்ணா சஹா எம்.எல்.ஏ.வை நேற்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். சி.ஆர்.பி.எப். பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து சென்றனர். அவர் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘ஜிபன் கிருஷ்ணா சஹா தனது இரண்டு செல்போன்களை வீட்டை ஒட்டியுள்ள குளத்தில் வீசியுள்ளார். அதில் இருந்து தண்ணீரை வெளியேற்றி ஒரு செல்போன் மீட்கப்பட்டது. அவரது செல்போன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மீட்கப்பட்ட செல்போனில் உள்ள தகவல்களை மீட்டெடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளார்கள். விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த போது செல்போன்களை குளத்தில் வீசியதாக கூறப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு பலரிடம் பணம் வாங்கியதாக ஜிபன் கிருஷ்ணா மீது குற்றச்சாட்டு உள்ளது. சோதனையில் முறைகேடு தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்து இருந்த நிலையில் ஜிபன் கிருஷ்ணா சஜா எம்.எல்.ஏ. நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.