இந்திய கொடியை முகத்தில் வரைந்து சென்ற பெண்ணுக்கு பொற்கோவிலில் அனுமதி மறுப்பு
1 min read
Woman with Indian flag painted on face denied entry to Golden Temple
17.4.2023
இந்திய கொடியை முகத்தில் வரைந்து சென்ற பெண்ணுக்கு பொற்கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல என ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.
பொற்கோவில்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவிலுக்கு சென்ற ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தனது முகத்தில் இந்திய தேசியக் கொடி போன்று மூவர்ணத்தை வரைந்து சென்றதால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பொற்கோவில் பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்லக்கூடாது என்று சொல்கிறார். அந்த பெண், இது இந்தியா இல்லையா? என் கேட்கிறார். அதற்கு பதிலளித்த காவலர் ‘இது பஞ்சாப்’ என கூறுகிறார்.
இது இந்தியா இல்லையா என்று காவலரிடம் திரும்பத் திரும்பக் கேட்டதற்கும், அவர் இல்லை என்றே தலையசைக்கிறார். நடந்த சம்பவத்தை அந்தப் பெண் தனது செல்போனில் பதிவு செய்வதை பார்த்த காவலர் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.
மன்னிப்பு
அந்த அதிகாரியின் செயலுக்கு பொற்கோவிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த சின்னத்தில் அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல, அரசியல் கொடியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.