அம்பாசமுத்திரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது
1 min read
3 arrested for murdering a teenager near Ambasamudram
23.4.2023
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 3 பேர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
சொத்து பிரச்சினை
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் இவருடைய மகன் செல்வா என்ற சிவராமன் (வயது 25) இவர் பி ஏ வரை படித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சார்ந்த இவரது உறவினர் சுடலைமுத்து குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் சிவராமன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு தனது பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சுடலைமுத்து என்பவரது மகன் உலகநாதன் என்ற சங்கர் என்பவர் செல்போனில் சிவராமனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் சொத்து பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் எனவே ஆலடியூர் செல்லும் வழியில் உள்ள கல்குவாரி அருகில் வருமாறு சிவராமனை அழைத்துள்ளார்.
கொலை
அதன்படி சிவராமன் தனது பைக்கில் அங்கு சென்றுள்ளார். அப்போது கல்குவாரி அருகில் சாலையோரம் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சிவராமனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.இதையறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்றிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த சிவராமனை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
இந்த சம்பவம் குறித்து விக்கிரம சிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொலை தொடர்பாக பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த முருகன், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மருதப்பபுரம் பகுதியை சேர்ந்த ராசு ஆகிய மூன்று பேர்களை உடனடியாக கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய சங்கர், ராஜா ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.