July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

2024 தேர்தலில் வென்றால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

1 min read

Only winning 2024 elections can save the country: CM Stalin’s speech

23/4/2023

2024-இல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருமண விழா

திமுக விவசாய அணியின் துணைச் செயலாளர் நல்லசேதுபதியின் இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (ஏப்.23) நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது. எனவே அந்த நூற்றாண்டு விழாவையொட்டி, நம்முடைய கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, ஒரு இலக்கு வைத்திருக்கிறோம்.
புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, அதையும் தாண்டி, 2024-இல் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆங்காங்கே பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்திருக்கிறோம்.எனவே அந்த இலக்கை நாம் நிறைவேற்றினால்தான் இந்த நாட்டை நாம் காப்பாற்ற முடியும். அதை மனதில் நீங்கள் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் 2 ஆண்டு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று நான் சொல்வதில்லை, இது நம்முடைய ஆட்சி என்றுதான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

சட்டமன்றத்தில்கூட பட்ஜெட் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் பேசுகிறபோது குறிப்பிட்டு சொன்னேன். ஆட்சிக்கு வந்து இந்த 2 ஆண்டு காலத்தில் என்னென்ன பணிகள் எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம். 3-ஆம் ஆண்டை தொடங்கவிருக்கிறோம்.தேர்தல் நேரத்தில் அளித்த அத்தனை உறுதிமொழிகளையும் எந்த அளவிற்கு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நிதிநிலை ஒரு கொடுமையான பற்றாக்குறை இருந்தாலும், இன்றைக்கு ஒன்றிய அரசு நமக்கு தேவையான அளவிற்கு துணை நிற்காவிட்டாலும், அதை எல்லாம் தாண்டி, அதை எல்லாம் மீறி, இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாநிலமாக, முதலிடத்திற்கு வரும் மாநிலமாக, நம்பர் ஒன் முதல்வர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒரு மாநிலமாக நாம் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறோம், வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதையும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் இருந்த நிதிநிலை சூழ்நிலை, அதை எல்லாம் இன்றைக்கு முறைப்படுத்தி, வகைப்படுத்தி, அதை எல்லாம் ஓரளவுக்கு சீர் செய்து, அதற்குப் பிறகு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்திருக்கிறோம். வருகிற செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் அன்று அந்த உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவிருக்கிறது என்ற அந்தச் செய்தியை சொல்லி இருக்கிறோம்.

இவ்வாறு பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல திட்டங்களைத் தீட்டி கொண்டிருந்தாலும், அதே நேரத்தில் மாநில உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மாநில உரிமைக்கு நாம் போராட வேண்டும் என்ற அந்த நிலையிலும் இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.2024-இல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

திராவிட ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் என்றைக்கும் துணைநிற்க வேண்டும். அதே நேரத்தில் மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் இப்போது தயாராக இருக்க வேண்டும். அதற்கு உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 2024-ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நம்முடைய அணிக்கு நீங்கள் ஏற்படுத்தித் தருவதற்கு துணை நில்லுங்கள்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.