ராகுல் காந்தியை தங்கள் வீடுகளில் தங்க வருமாறு ஆயிரக்கணக்கான மக்கள் அழைப்பு
1 min read
Thousands of people invited Rahul Gandhi to stay in their homes
24.4.2023
எம்.பி. பதவி பறிபோனதால் டெல்லியில் ராகுல் காந்தி வசித்து வந்த வீட்டையும் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. அதனால் ராகுல்காந்தியை ஆயிரக்கான மக்கள் தங்கள் வீட்டுக்கு தங்க வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராகுல்காந்தி
கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் நடந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற செயலகம் அவரது எம்.பி. பதவியை பறித்தது. எம்.பி. பதவி பறிபோனதால் டெல்லியில் ராகுல் காந்தி வசித்து வந்த வீட்டையும் காலி செய்யும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி, டெல்லி அரசு வீட்டை காலி செய்து விட்டு தாயார் சோனியா வீட்டுக்கு சென்றார். இதுபற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-
உண்மை பேசியதற்காக எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் பயப்பட போவதில்லை. எம்.பி. பதவியை பறித்ததோடு டெல்லியில் உள்ள அரசு வீட்டையும் காலி செய்ய கூறினார்கள். இதனை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தங்க வருமாறு என்னை அழைத்தனர். எனது அரசு வீடு பறிக்கப்பட்ட நாள் முதல் எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தன. அதில் மக்களின் அன்பை தெரிந்து கொண்டேன். அவர்களின் இதயங்களில் நான் வாழ்வதை புரிந்து கொண்டேன். வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதில் நம்பிக்கை கொண்ட பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் உறுதியாக போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.