May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க ‘பிளாக் மெயில்’— ஆடியோ சர்ச்சைக்கு பிடிஆர் விளக்கம்

1 min read

‘Black mail’ to separate me from Udhayanidhi, Sabarisan—- PTR explanation of audio controversy

26.4.2023
“திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை சில சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்” என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது இந்த அறிக்கை ஏப்ரல் 22, 2023 அன்று நான் வெளியிட்ட எழுத்துபூர்வமான அறிக்கையின் தொடர்ச்சியாகும். இதனை தொடர்வதற்கு முன்னர் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) எப்படி Deep Fake போலி காணொளிகளை உருவாக்கும் என்பதற்கான சில உதாரணங்களை நான் காண்பிக்க விரும்புகிறேன். உதாரணங்களுக்கான இணைப்புகள்:

Reality Check: Deepfake Videos in Delhi Elections? (https://t.co/PfY57t31Gl)
It’s Getting Harder to Spot a Deep Fake Video (https://t.co/PbFbwzQu9W)
SASSY JUSTICE -Official White House Address| Deepfake (https://t.co/O3SSEuwCCy)

இத்தகைய உண்மை போன்று தோற்றமளிக்கும் வீடியோக்களை கணினி மூலம் உருவாக்க முடியும் என்றால், ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவிவரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும் எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன்.
இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநில தலைவர், யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.

சாதனை

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம். இதையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி முறை என்று அழைக்கிறோம். இத்தகைய உயரிய இலக்குகளை அடைய நாங்கள் மிகப் பெரிய நிதி சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம்.
இவை கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு செய்தவற்றைவிட மகத்தான சாதனைகளாகும். இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியும்.
இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை, மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

முதல்வர், தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். எங்களது நம்பிக்கை நட்சத்திரமான விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தவர்களில் நானும் ஒருவன். அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். முதல்வரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழக விளையாட்டுத் துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்? அதேபோன்று நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேச வேண்டும்?

நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன். எதிர்க்கட்சிகள்கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால், இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.

திமுக தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனிவரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம். அறம் வெல்லும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பேசி வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.