July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

“விருதுநகரில் ஆலை தொடங்கி மூலிகை பெட்ரோல் ரூ.15-க்கு விற்கப்படும்” – ராமர் பிள்ளை

1 min read

“The plant will be started in Virudhunagar and herbal petrol will be sold at Rs. 15” – says Ramar Pillai

26.4.2023
விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படும் என்று ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமர் பிள்ளை தெரிவித்தார்.

ராமர் பிள்ளை மற்றும் அவரது சட்ட ஆலோசகர் சொக்குசாமி ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் ராமர் பிள்ளையின் சட்ட ஆலோசகர் சொக்குசாமி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

மூலிகை பெட்ரோல்

ராமர் பிள்ளை கண்டுபிடித்தது மூலிகை பெட்ரோல் அல்ல, வேதி பொருட்களை கொண்டு போலியாக தயாரிக்கப்பட்டது எனக் கூறி கடந்த 2000-ம் ஆண்டு சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டு ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராமர் பிள்ளை தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ராமர் பிள்ளையை விடுதலை செய்து தீர்ப்பளித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ராமர் பிள்ளை பேசும்போது கூறியதாவது:-

பொய்யான குற்றச்சாட்டு

1999-ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து, முறையான அனுமதி பெற்று, ஆலை தொடங்கி, மூலிகை பெட்ரோல் தயாரித்து ஒவ்வொரு லிட்டருக்கும் அரசுக்கு வரி செலுத்தி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது மூலிகை பெட்ரோல் அல்ல, போலி பெட்ரோல் என வழக்கு தொடரப்பட்டது. ராஜபாளையத்தில்தான் முதலில் இந்த மூலிகை பெட்ரோல் தயாரித்து வெளியிட்டேன். தற்போது என்மீது உள்ள குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபித்து விட்டேன்.
விரைவில் விருதுநகர் மாவட்டத்தில் பெரிய மூலிகை பெட்ரோல் உற்பத்தி ஆலை தொடங்கப்படும். அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும். மூலிகை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.15-க்கு வழங்க முடியும்.

புகை இல்லாத பெட்ரோல் வழங்க முடியும். எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள் முன் நிரூபித்து உள்ளேன். புதிய ஆலை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன்வந்து உள்ளனர். இன்னும் 40 நாட்களில் புதிய ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். இனி எனது கண்டுபிடிப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

சித்த மருத்துவர் கூடலிங்கம், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கோவிந்தன், சட்ட ஆலோசகர் சொக்குசாமி பாலசுப்பிரமணியம் உட்பட பலர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.