வெறுப்பு பேச்சு பேசினால் மதத்தை பார்க்காமல் வழக்கு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min read
File case against hate speech even without complaint – Supreme Court orders states
28/4/2023
வெறுப்பு பேச்சு கடுமையான குற்றம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வாறு பேசியது தொடர்பாக புகார் இல்லாவிட்டாலும் வழக்கு பதிய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
வெறுப்பு பேச்சு
வெறுப்பு பேச்சு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை, நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, “வெறுப்பு பேச்சு ஒரு கடுமையான குற்றம். இது தொடர்பாக புகார் இல்லாவிட்டாலும் மாநில அரசுகள் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். வழக்குகளை பதிவு செய்வதில் தாமதம் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.
வெறுப்பு பேச்சு பேசுபவரின் மதத்தைக் கருத்தில் கொள்ளாமல், அவருக்கு எதிராக வழக்கு பதிய வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பு உரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். வெறுப்பு பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை பாதிக்கும். குறிப்பாக சிறுபான்மையினரிடையே, இது கவலையையும், அச்சத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரியை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 12 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.