May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவு சின்னம் – 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

1 min read

Pen Memorial to Karunanidhi in Bay of Bengal – Environment Ministry approves with 15 conditions

சென்னை மெரினா கடல் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதி பேனா

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையொட்டி கருத்துக் கேட்புக் கூட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டன. சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பின.

இந்நிலையில் நினைவுச் சின்னத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறையானது கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் மத்திய வனம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் நிபுணர் குழு வங்கக்கடலில் மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற்ற சுற்று சூழல் அமைச்சக கூட்டத்தில் இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிபந்தனைகள் என்னென்ன?

நினைவுச் சின்னத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். தேசிய கடலோரா ஆராய்ச்சி மையம் மண் அரிப்பு, மணல் திரட்சி உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. ஆமை இனப்பெருக்க காலத்தில் நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. நினைவுச் சின்னத்திலிருந்து சாலை இணைப்பு, போக்குவரத்து மேலாண்மை, அவசரகால பாதுகாப்பு திட்டம் ஆகியன அறிக்கையில் குறிப்பிடப்பட்டதுபோல் எள்ளளவும் வேறுபடாமல் பின்பற்றப்பட வேண்டும்.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான விவரங்களில் ஏதேனும் தவறான, போலியான தகவல் இருப்பது தெரியவந்தால் எந்த நேரத்திலும் அனுமதி வாபஸ் பெறப்படும்.

மேற்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அனுமதியானது தேசிய பசுமை தீர்ப்பாயம், தெற்கு மண்டலத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.