May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

“திராவிட மாடல்” என்பது காலாவதியான கொள்கை- கவர்னர் ஆர்.என்.ரவி பேட்டி

1 min read

“Dravidian Model” is an outdated policy- Governor RN Ravi interview

4/5/2023
“திராவிட மாடல்” என்பது காலாவதியான கொள்கை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

கவர்னர் ஆர்.என்.ரவி

கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தி.மு.க. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக சட்ட மசோதா தொடர்பாக விரிவான விளக்கம் அளித்துள்ளார். அந்த பேட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழக சட்ட சபையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நான் சட்டசபையில் கவர்னர் உரையாற்றும் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தேன். என்றாலும் சட்டசபையில் கவர்னர் உரையின் போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. மாறாக கவர்னர் உரையின் போது திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்து பேச வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் நான் அதை பேசவில்லை.

கலாவதியாகிவிட்டது

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து நான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, கள்ளக்குறிச்சி சம்பவம் போன்றவற்றை குறிப்பிட்டு பேசினேன். கவர்னர் உரையில் திராவிட மாடல் அரசு பற்றி நான் புகழ்ந்து பேச வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். திராவிட மாடல் அரசு என்று எதுவும் கிடையாது. திராவிட மாடல் என்பது அரசியல் கோஷம் மட்டுமே ஆகும். திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறார்கள். அது ஒரே பாரதம் ஒரே இந்தியா கொள்கைக்கு பொருந்தாத ஒன்றாகும்.
திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தியாகிகளின் நினைவை மற்றும் வரலாற்றை அழிக்கும் வகையில் பேசப்படுகிறது.
திராவிட மாடல் கொள்கை நாட்டில் மற்ற மொழிக்கு எதிராகவும் அமைந்துள்ளது. தமிழ் நாட்டுக்குள் நாட்டின் மற்ற மொழிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கலைஞர் நூலகம் 3.25 லட்சம் புத்தகங்களுடன் அமைகிறது. ஆனால் அந்த புத்தகங்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற மொழிகளுக்கு அங்கு இடம் இல்லை. இது பிரிவினைவாத சிந்தனையை உருவாக்கும். கவர்னர் உரையின் போது இதை நான் உணர்ந்தேன். இதை நான் ஏற்க மாட்டேன்.

வெளிநடப்பு ஏன்?

கவர்னர் உரையை நான் வாசித்து முடித்த பிறகு மரபுக்கு மீறி எனக்கு எதிராக செயல்பட முயற்சி செய்தனர். எனவே தான் நான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தேன். நான் சட்ட நடைமுறைகளை அவமதித்துவிட்டதாக சொன்னார்கள். டாக்டர் அம்பேத்கர் பற்றி அவர்கள் எனக்கு சொல்லி தரவேண்டிய அவசியம் இல்லை. அவர் என் மனதில் வாழ்கிறார். அரசின் கொள்கை ரீதியாக எனக்கு மாறுபாடுகள் இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்புறவு இருக்கிறது. அவர் நல்ல மனிதர். அவருக்கு நான் உரிய மரியாதை கொடுக்கிறேன். அவரும் எனக்கு மரியாதை அளிக்கிறார். அந்த வகையில் எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவு நீடிக்கிறது. என்றாலும் அரசின் நிர்வாகத்தில் நான் அத்து மீறி தலையிடுவதாக தவறான தகவல் சொல்லப்படுகிறது. என்னை பொருத்தவரை கவர்னர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுபவர். நான் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பாதுகாவலராக இருக்கிறேன். அரசியல் அமைப்பு சட்டத்தை மாநில அரசு மீறினால் அதை தடுத்து நிறுத்த வேண்டியது கவர்னரின் கடமை ஆகும். அப்படி இருக்கும் போது மாநில நிர்வாகத்தில் நான் குறுக்கிடுவதாக எப்படி சொல்ல முடியும். எல்லா அதிகாரங்களும் மாநில அரசிடம் உள்ளன. கவர்னரிடம் எதுவும் கிடையாது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்தால் மட்டுமே அதை தடுத்து நிறுத்துவது கவர்னரின் கடமை ஆகும். தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை நான் நிலுவையில் வைத்திருப்பதாக அடிக்கடி சொல்கிறார்கள். கவர்னர் மாளிகையிலோ அல்லது கவர்னரிடமோ எந்த மசோதாவும் எப்போதும் நிலுவையில் இல்லை.

மசோதாவுக்கு ஒப்புதல்

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பதவி ஏற்றபோது 19 மசோதாக்கள் வந்தது. அதில் 18 மசோதாக்களை ஒப்புதல் அளித்து அனுப்பினேன். நீட் மசோதாவுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. அது நாட்டின் பொது பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் ஜனாதிபதி கருத்துக்காக நிறுத்தி வைத்துள்ளேன். கடந்த ஆண்டு மொத்தம் 59 மசோதாக்கள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 48 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து திருப்பி அளித்துள்ளேன். 3 மசோதாக்கள் ஜனாதிபதி கருத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. 8 மசோதாக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே கவர்னர் மாளிகையில் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை.
2023-ம் ஆண்டு இதுவரை என்னிடம் 7 மசோதாக்கள் வந்தன. அந்த 7 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அது நடைமுறைக்கு வரும் என்று நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 8 மசோதாக்களில் சித்த மருத்துவ கொள்கைகளுக்கான மசோதாவும் ஒன்றாகும். அதில் முதலமைச்சர் 2 தடவை வேந்தராக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே தான் அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக நமது மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் ஒரு துறை போலவே நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக நடைமுறைகள் அனைத்தும் பொது பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே தான் அது தொடர்பான மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
சட்டசபையில் நிதி அமைச்சர் பேசும்போது கவர்னர் மாளிகைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை பயன்படுத்தி முறைகேடுகள் நடப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் நிதி அமைச்சர் உண்மைக்கு மாறான தகவல்களையே வெளியிட்டுள்ளார். கடந்த 2000-மாவது ஆண்டிலேயே கவர்னர் மாளிகை நிதி பயன்பாட்டில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மறைத்துவிட்டு நிதி அமைச்சர் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.