குற்றாலம் அருகே பழ வியாபாரி வெட்டிக்கொலையில் 2 பேர் கைது
1 min read
2 arrested in the murder of a fruit vendor near Courtalam
16.5.2023
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே வல்லம் பகுதியில் முன்விரோதம் மற்றும் வியாபார போட்டி காரணமாக பழ வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 2 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
கொலை
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி என்பவரது மகன் சுடலை (வயது 41). பழ வியாபாரியான இவர் குற்றால சீசன் காலங்களில் கேரளாவில் இருந்து ரம்டான் மற்றும் மங்குஸ்தான் போன்ற அரியவகை பழங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இன்னும் சில நாட்களில் குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் மங்குஸ்தான், ரம்டான் போன்ற அரியவகை பழங்களை ஏலம் எடுப்பதற்காக சுடலை கேரளாவிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே ஏலத்தில் வல்லம் பகுதியைச் சேர்ந்த காளிதாசன் என்பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏலத்தில் கடுமையான போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சுடலை, ரம்டான் மற்றும் மங்குஸ்தான் பழத்தை ஏலத்தில் எடுத்து விட்டார். இதனால், காளிதாசனுக்கும், சுடலைக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள சுடலைமாடன் கோவில் அருகில் சுடலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் சுடலையை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்..
இதுகுறித்து தகவல் அறிந்த,
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், துணை காவல் கண்காணிப்பா ளர் நாகசங்கர் மற்றும்
குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக சுடலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது
இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் வல்லம் ஆதித்தனார் காலணியைச் சேர்ந்த ராமையா என்பவரது மகன் காளிதாசன் (வயது 44) கல்யாணகுமார் என்பவரது மகன் சங்கர் (வயது 39) இருவரும் சுடலையை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது .
உடனடியாக போலீசார் காளிதாசன் சங்கர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.விசாரணைக்கு பின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.