June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பெங்களூருவில் கர்நாடகாவின் 24-வது முதல்வராக சித்தராமையா பதவியேற்றார்

1 min read

Siddaramaiah was sworn in as the 24th Chief Minister of Karnataka in Bengaluru

20.5.2023
பெங்களூருவில் கர்நாடகாவின் 24-வது முதல்வராக சித்தராமையா பதவியேற்றார்.

கர்நாடக முதல் மந்திரி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் முத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் கோலாகலாமக நடைபெற்றது.
முதலில் முதல்-மந்திரியாக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள்.
அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற சித்தராமையா கர்நாடகாவின் 24-வது முதல்-மந்திரி ஆவார்.
மு.க.ஸ்டாலின்

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின்(தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல்(சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு(இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன்(ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு விழா மேடையில் 30 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் மேடை முன் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மைதானத்தின் நடுவில் சுமார் 40 ஆயிரம் இருக்கைகளும், மைதானத்தின் கேலரியில் பொதுமக்களுக்கான இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.
பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத்திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
மந்திரி சபை பதவி ஏற்றதை தொடர்ந்து புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி, உளவுத்துறை, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட ஒதுக்கப்படாத அனைத்து துறைகளையும் முதல்-மந்திரி சித்தராமையா வைத்துக் கொள்வார். டிசிஎம் டி.கே. சிவக்குமார், நீர்வளத்துறையுடன் மற்றொரு முக்கிய துறையையும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித்தராமையா, பெங்களூரு விதானசவுதாவில் (சட்டசபை) உள்ள முதல்-மந்திரி அறைக்கு செல்கிறார். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.