புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
1 min readPrime Minister Modi inaugurated the new Parliament
28.8.2023
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
புதிய பாராளுமன்ற கட்டிடம்
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது. மேலும், அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.
இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள். புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார்.
திறந்தார்
இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து, நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து பிரதமர் மோடி கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தினை நடைபெற்றது.
இதனையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது அவையில் இருந்தவர்கள் மோடி மோடி என உற்சாக குரல் எழுப்பினர். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக திகழும் என பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர்
நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட அவர், “நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்படுவதால், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. நாடாளுமன்றக் கட்டிடம் எனும் இந்த சின்னம், அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும்; கனவுகளை காணச் செய்து அவற்றை நனவாக்கட்டும். இது நமது மகத்தான தேசத்தை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும்” என தெரிவித்துள்ளார்.
கட்டியது ஏன்?
பழைய நாடாளுமன்றக் கட்டிடம் 1927ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்த மத்திய அரசு, அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நாட்டினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் பணி டாடா ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு சாதனை கால அளவில் முடிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம் நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றும் நோக்கில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பொருட்கள் வாங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. 4 மாடிகளைக் கொண்டது. நாடாளுமன்றத்தின் கட்டிட பரப்பளவு 64,500 சதுர மீட்டர். இந்த கட்டிடம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது. விஐபி-க்கள், எம்பிக்கள், பார்வையாளர்கள் செல்வதற்கு தனித்தனி வாயில்கள் இருக்கும்படி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும், மாநிலங்களவை 300 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது மக்களவையில் ஆயிரத்து 280 பேர் அமரக்கூடிய வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.