சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காது
1 min readCBI No train will stop at Pahanaka Bazar railway station till the investigation is over
10.6.2023
ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காது.
ஒடிசா ரெயில் விபத்து
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிந்து உண்மையை கண்டறியும் வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காதவாறு சமிக்ஞை கட்டுப்பாடு மூடப்பட்டு விட்டது.
பஹனாகா பஜார் ரெயில் நிலையம் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் ரிலே இண்டர்லாக்கிங் பேனல்களில் ஒளிரூட்டப்பட்ட சிக்னல் குறியீடுகள், பாயிண்டுகள், ட்ராக் சர்க்யூட்ஸ், க்ராங்க் ஹேண்டில்கள், எல். சி.கேட், சைடிங்க்ஸ் இத்யாதிகள் அவற்றின் புவியியல் நிலைக்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தை சீலிட்டு பதிவுப் புத்தகத்தையும் சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளதால் இங்கு ரெயில்கள் நிற்காது என தென்கிழக்கு ரெயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறியுள்ளார். சி.பி.ஐ. அமைப்பினர், ரிலே இண்டர்லாக்கிங் பேனல் அமைப்பிற்கு சீல் வைத்துவிட்டனர். இது ரெயில் சமிக்ஞை கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். இதை தடை செய்ததால் பயணிகள் ரெயிலோ, சரக்கு ரெயிலோ இங்கு நிற்காது எனவும் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் அனைத்து இருப்பு பாதைகளும் சரி செய்யப்பட்டிருந்தாலும், சில கோளாறுகள் சரிசெய்ய வேண்டி உள்ளதால் சுமார் 24 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.