“15 நாட்களுக்குப்பின் எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது”-செந்தில்பாலாஜி மனைவியின் வக்கீல் வாதம்
1 min read
“After 15 days, for any reason, you cannot be detained and interrogated” – Senthilbalaji’s wife’s lawyer’s argument
22.6.2023
“15 நாட்களுக்குப்பின், சுனாமி, கரோனா உள்ளிட்ட எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், செந்தில்பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரியும் அவரது மனைவி மேகலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜியை, மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்தும், இந்த ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடியதாவது:-
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்ததும், கைதுக்கான காரணங்களை தெரிவிக்காததும் சட்டவிரோதம். எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது.
கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது அடிப்படை உரிமை என அரசியல் சட்டம் கூறுகிறது. அந்த அடிப்படை உரிமை மீறப்டும்போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். செந்தில்பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்தது மட்டுமல்லாமல், இயந்திரத்தனமாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி அதிகாலை செந்தில்பாலாஜியை, அவரது உடல்நிலை காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறிய அமலாக்கத்துறை, அவரது சிகிச்சையை போலி என்று எப்படி கூற முடியும்?
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக சேர்க்கக்கூடாது என அமலாக்கத் துறை முன்வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும். 15 நாட்களுக்குப்பின், சுனாமி, கரோனா உள்ளிட்ட எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு, காவல்துறை அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும்?
இவ்வாறு அவர் வாதிட்டார்.
ஒத்தி வைப்பு
இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை ஏற்று, அமலாக்கத்துறை பதில் வாதத்துக்காக, விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.