23 நாட்களுக்குப் பிறகு களக்காடு தலையணை இன்று திறப்பு-சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
1 min read
After 23 days, Kalakadu Payayayan opens today-tourists allowed to take bath
9.7.2023
களக்காடு தலையணையில் 23 நாட்களுக்குப் பிறகு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
களக்காடு
களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறையினரால் சுற்று சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடையே தலைய ணையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கின. இதையடுத்து களக்காடு தலையணை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தலையணைக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளம் தணிந்ததால் இன்று காலை தலையணை நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்து ள்ளனர். 23 நாட்களுக்கு பிறகு தலையணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.