July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

செந்தில் பாலாஜி வழக்கில் கபில்சிபல் வாதம் நிறைவு-நளைக்கு ஒத்திவைப்பு

1 min read

Kapilcipal argument in Senthil Balaji case concluded-adjournment to tomorrow

11.7.2023
செந்தில் பாலாஜி வழக்கில் கபில்சிபல் வாதம் நிறைவு-நளைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

செந்தில்பாலாஜி

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியதாவது:-

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்.
கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம். சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுவார் எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார்.

குற்றம்சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடைமுறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத் துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தவறானது. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை? எனக் கேள்வி எழுப்பிய அவர், அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடியவில்லை என்றால் அதை எதிர்த்து அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

மருத்துவர்களிடம் சொல்லி உரிய ஏற்பாடுகளுடன் விசாரணை நடத்தியிருக்கலாம். அதற்கு, எந்த தடையும் இல்லை. காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிலையில், காவலில் எடுக்காததால், முதல் 15 நாட்களை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என அமலாக்கத் துறை கோர முடியாது” என்றார்.

அப்போது நீதிபதி, மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ஏதேனும் தடை இருந்ததா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “எந்த தடையும் இல்லை. மருத்துவர்களே விசாரணை நடத்த அனுமதித்ததாக அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்க கூடாது என நீதிபதி நிஷாபானுவும், தங்கள் காவலில் வைத்து விசாரிக்க கோரி அமலாக்க துறை அமர்வு நீதிமன்றத்தை அணுகியது குறித்து நீதிபதி பரத சக்கரவர்த்தியும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆரம்பம் முதல் அமலாக்கத் துறை அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும், சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளது என்ற, நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது” எனக் கூறி, தனது வாதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனத் தெரிவித்துள்ளனர். கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம்.

செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின், நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை நிராகரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதியின் நடைமுறை சரியானதல்ல.கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கிய போது அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகு திருத்தப்பட்டுள்ளன, இது முறைகேடு. ஜூன் 13-ம் தேதி சோதனை துவங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். வாக்குமூலமும் அளித்தார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், காவலில் வைத்து விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்தால் காவலை திரும்ப வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்க கூடாது என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “அமலாக்கத் துறை காவலில் எடுத்திருந்தால்தான் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்” என விளக்கமளித்தார். அதற்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிமன்றத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பிய மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்கவில்லை” என குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, மேகலா தரப்பு வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.