July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பொது சிவில் சட்டம் வேண்டாம் என்பதற்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

1 min read

Chief Minister M. K. Stalin’s explanation for not wanting a general civil law

13.7.2023
பொது சிவில் சட்டம் வேண்டாம் என்பதற்கான என்ன காரணம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி கடிதம் எழுதியுள்ளார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென்று கோரி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின இன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுவதாகவும், சில சீர்திருத்தங்களின் அவசியத்தைப் தாம் உணரும் அதேவேளையில், பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்றும், நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்பிற்கு சவால் விடுப்பதாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்ப்பதற்கான காரணங்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்: மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, “ஒருவர். தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை” உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன என்றும், அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம் மற்றும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதன் காரணமாகவும், மேலும் பல காரணிகளுடன், அரசியலமைப்பின் 44-வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தனது. 31.8.2018 நாளிட்ட அறிக்கையினை விவாதிப்பதற்காக சமீபத்தில் கூடிய இந்தியாவின் 21-வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளதை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்பு சட்டநெறிமுறைகளுக்கு முரணாக அமைவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனிநபர் சட்டங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுவதாக மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கலாச்சாரம் மற்றும் மத பன்முகத்துவம்: வேற்றுமையில் ஒற்றுமைக்கும், கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா என்றும், பொது சிவில் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதன் மூலம், இந்த பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பன்முகக் கட்டமைப்பின் சாராம்சத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழிவகுக்கும் என கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மதக் குழுவுக்கும், அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் பிரிவு 25-ன்கீழ் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை பொது சிவில் சட்டம் மீறுவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், பிரிவு 29, பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டம் போன்ற ஒரு சட்டத்தைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியும், மத விவகாரங்களில் அரசின் அத்துமீறலாக கருதப்படும் என்றும், இது எதிர்காலத்தில் தனிமனித சுதந்திரங்கள் மீதான ஆக்கிரமிப்புகளுக்கு கவலைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கிடும் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மாநிலங்களுக்கு தன்னாட்சியை வழங்குகிறது மற்றும் அவற்றின் தனித்துவமான சமூக-கலாச்சார அடையாளங்களை மதிக்கிறது என்று தெரிவித்துள்ள அவர். தனிநபர் சட்டங்களை மையப்படுத்துவதன் மூலமும், மாநிலங்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதற்கான உரிமைகளை அழிப்பதன் மூலமும், பொது சிவில் சட்டம் இந்தக் கோட்பாட்டை மீறுவதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மாநிலங்களின் செயலூக்கமான பங்கேற்பு மற்றும் ஒப்புதல் இல்லாமல் தனிநபர் சட்டங்களில் எந்தவொரு சீர்திருத்தமும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும், தனிநபர் சட்டங்களில் உள்ள சீரான தன்மை ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், பலவகையான மத, பண்பாட்டு, மொழி வேறுபாடுகள் உள்ள நமது நாட்டில், மத நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானது என்றும், முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக்கூடிய ஒரே வகையான சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக்களிடையே பரஸ்பர புரிதலையும், மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம் என முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வரலாற்று பின்னணி

இந்தியாவில் தனிநபர் சட்டங்கள் பல நூற்றாண்டுகளாக பரிணமித்துள்ளன என்றும், பல்வேறு சமூகங்களின் வரலாற்று, கலாச்சார மற்றும் மத சூழல்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டத்திற்கான முன்மொழிவு இந்த வரலாற்று அம்சத்தை அங்கீகரிக்கத் தவறுவதுடன், பல்வேறு மதக் குழுக்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகாத ஒரு சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 29-வது பிரிவின்மூலம், சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்வதாகவும், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை. மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகள், மாவட்ட மற்றும் வட்டாரக் கவுன்சில்கள் மூலம் தங்கள் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டம் இயல்பிலேயே, அத்தகைய பழங்குடி சமூகங்களை அதிக அளவில் பாதிக்கும் மற்றும் அவர்களின் பாரம்பரிய நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அடையாளங்களைப் பின்பற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கியதாக பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நமது சமூகத்தில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வெவ்வேறு சமூகங்கள் வளர்ச்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வின் வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளன என்றும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரேமாதிரியான அணுகுமுறை தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில், மாநில அரசுகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இச்சட்டம் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு முக்கியமானது என இந்திய சட்ட ஆணையத் தலைவரிடம் கோரியுள்ளார். மேற்காணும் கருத்துகளைத் தீவிரமாகப் பரிசீலித்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தியை கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளதோடு, பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் தன்மை வழிவகுக்காது என்ற அடிப்படைக் கோட்பாட்டை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் உள்ளதாகவும், பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதை விட, நாம் நமது பன்முகத்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.