முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-அண்ணாமலை பதில்
1 min readChief Minister M. K. Stalin should apologize to Shiva – Annamalai Dwitt
31.7.2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாவயாத்திரை செய்து, ராமேசுவரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கலக்கடித்துள்ளது
புண்ணிய பூமியான ராமேசுவரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்த நடைபயணம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாவ யாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், தி.மு.க. முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் தி.மு.க. அரசு கவனம் செலுத்துகிறது.
தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது தி.மு.க.வின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், தி.மு.க.வினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மவுனப் பார்வையாளர்களாகவே இருந்தனர்.
மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.
2009-ம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார். பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாவயாத்திரை செய்து, ராமேசுவரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.