மணிப்பூர் வன்முறை: கவர்னரிடம் அறிக்கை அளித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
1 min read
Manipur violence: Opposition MPs report to Governor
30.7.2023
வன்முறையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கள ஆய்வு செய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்றும் இன்றும் ஆய்வு செய்த அவர்கள் இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்தனர்.
அப்போது மணிப்பூர் வன்முறை தொடர்பான கள நிலவரத்துடன் தங்கள் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர். பின்னர் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-
மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசுவதற்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அப்போது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மக்கள் எழுப்பும் பிரச்சனைகளையும், மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகளையும் முன்வைப்போம். காலதாமதம் செய்யாமல், எங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துமாறு இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், இது தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.