July 7, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் மனநல மருத்துவ மனைக்கு சீல்-12 பேர் மீட்பு

1 min read

Seal to Courtalam Psychiatric Clinic- Rescue of 12 people

12.8.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தின் மையப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மனநல மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்ததோடு அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் உட்பட 12 மனநோயாளிகளை மீட்டனர்.

மனநல மருத்துவமனை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தனியார் மனநல மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இங்கு சங்கரன்கோவில் சங்கர்நகரைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலரான ஆறுமுகம் என்பவரின் மகன் உமா மகேஸ்வரன் (வயது 37) சிகிச்சை பெற்று வந்தார்.

இங்கு பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் தனது மகனை பார்க்க அங்கு சென்றார். அப்போது அவர் மிகவும் மோசமான நிலையில் படுத்து இருந்ததை கண்டார். அவரது உடலில் சூடு வைக்கப்பட்டதால் கருப்பு நிற கோடுகள் மற்றும் கொப்புளங்கள் இருந்தன. இதனால் அவர் தனது மகனை அங்கிருந்து அழைத்துச் சென்று தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

இது தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .
இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் இன்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

சீல் வைப்பு

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, மனநல டாக்டர் நிர்மல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் அந்த வைத்தியசாலைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

மருத்துவமனை நடத்தி வந்தவர்களிடம் உரிய அனுமதி எதுவும் இல்லாததை கண்டுபிடித்தனர். மேலும், மருத்துவமனைக்கு தேவையான அரசு உத்தரவுகள் எதுவும் அவர்கள் பெறவில்லை என்பதும், முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் அங்கு சிகிச்சையில் இருந்த ஒரு பெண் நோயாளி உள்பட 12 பேரை அங்கிருந்து மீட்டு வடகரையில் உள்ள அரசு அனுமதி பெற்ற அன்பு ஆசிரமத்தில் சேர்த்தனர்.

நீண்ட நாட்களாக சுற்றுலா தலத்தில் அனுமதி பெறாமல் இந்த வைத்தியசாலை எப்படி இயங்கியது? என்றும், இந்த மருத்துவமனை
இயங்குவதற்கு வேறு யாரும் உதவி செய்தார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நடவடிக்கை குற்றாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.