July 7, 2025

Seithi Saral

Tamil News Channel

நாங்குநேரி போன்ற சம்பவங்கள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் நடப்பது ஏன்?- அண்ணாமலை கேள்வி

1 min read

Why do incidents like Nanguneri happen only in government and government-aided schools?- Annamalai asked

12.8.2023
“அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடிகிறது என்றால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் ஏன் தடுக்க முடியவில்லை?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர் மீது வெட்டு

நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே சாதியப் பிரச்சினைகள் காரணமாக, 12-ம் வகுப்பு பட்டியல் சமூக மாணவர்மற்றும் அவரது சகோதரி இருவரும் சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும், எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது. மாணவர், நன்றாகப் படிக்கும் மாணவர் என்றும், ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றவர் என்றும் அறிகிறேன்.
சிறந்த மாணவராக வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வரும் வாய்ப்புள்ள மாணவர் ஒருவர், சாதிய வன்முறையால் முடக்கப்படுவதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அற்ப அரசியல் லாபங்களுக்காக வேறு வேறு சமூகங்களிடையே சாதி வெறியைத் தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாகப் பலனடைந்து வரும் கட்சி, திமுக என்பதை அனைவரும் அறிவர். இந்த சம்பவத்திலும், திமுக கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் காவல்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் வாக்குகளுக்காக சமூகத்தில் சாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் திமுகவின் செயல்பாடுகளின் விளைவுதான், இதுபேன்ற கொடூர சம்பவங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவின் ஆரம்ப கால உறுப்பினராகவும், மறைந்த முதல்வர் அண்ணாதுரை அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியிலிருந்த மறைந்த சத்தியவாணி முத்து, திமுக தலைமை சாதியப் பாகுபாடு காட்டுகிறது என்றுகூறிய குற்றச்சாட்டு இன்று வரையில் அப்படியே தொடர்கிறது என்பது அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. திமுக கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும், திமுக அமைச்சர்கள் பட்டியல் சமூக மக்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்துவது, செய்திகளில் வந்து கொண்டுதான் இருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே, பட்டியல் சமூக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவரை சாதியின் பெயரைச் சொல்லி அழைத்த அமைச்சர் பொன்முடி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூக ஊராட்சி மன்ற பெண் தலைவரை, தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்தும், அமர்வதற்கு நாற்காலி கூடக் கொடுக்காமல் அவமானப்படுத்திய உங்கள் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட நிற்கவைத்த உங்கள் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

முதல்வர் ஸ்டாலின் அவர்களே, வேங்கைவயல் சம்பவம் நடந்து 200 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நீங்கள், குற்றவாளியை கைது செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மத்திய அரசு, பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் வழங்கும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பி வருகிறீர்கள். இதுவரை பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் ஒருபடி மேலாக பட்டியல் சமூக மக்களுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பட்டியல் சமூக மக்களுக்கான அடிப்படை வசதிகளோ, பட்டியல் சமூக மாணவர்களுக்கு, சரியான பள்ளி வசதியோ, விடுதி வசதிகளோ அல்லது வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்டஈடு தொகையோ, அந்த நிதியிலிருந்து வழங்க உங்களுக்கு மனம் வரவில்லை. யாரை ஏமாற்ற இந்த சமூகநீதி நாடகமாடி கொண்டிருக்கிறீர்கள்? தேர்தல் நேரத்தில், வெறும் போட்டோ எடுத்து ஏமாற்ற மட்டும்தான் உங்களுக்கு பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை வருமா?

மாணவர் கல்விப் பொறுப்பை, தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்கிறேன். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது அல்லவா மாநில அரசின் கடமை? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடிகிறது என்றால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் ஏன் தடுக்க முடியவில்லை?

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு, ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் தடம் புரள்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். பத்தாயிரம் சிதிலமடைந்த அரசுப் பள்ளி கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்று சொல்லி ஆண்டு இரண்டாகிறது. ஏழை மாணவர்கள் மீது அக்கறை இருந்தால்தானே செயல்படுத்த தோன்றும்?திமுக ஆட்சியின் அவலங்களை அனைத்துக்கும் யார் மீதோ பழிபோட்டு மடைமாற்றிக் கொண்டிருக்கும் தொல்.திருமாவளவன், உடைந்த பழைய நாற்காலி, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேண்டுமானால் போதுமான சமூக நீதியாக இருக்கலாம். ஆனால், உங்களையும் தலைவர் என்று பின்தொடரும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் இதன்மூலம் நீங்கள் கொடுக்கும் செய்தி என்ன?

இப்படி சமூக நீதிக்கெதிரான செயல்கள் அனைத்தையும் மடைமாற்றுவதால் உங்களுக்கு கிடைக்கும் பலன்தான் என்ன? ஏன் உங்கள் கட்சியினரையும், மக்களையும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் உச்சஸ்தாயில் குரல் கொடுக்கும் நீங்கள், தமிழகத்தில் தோழமை சுட்டபோது கூட பேச்சு வராமல் முடங்கிப் போய் வீட்டீர்களே? உங்கள் தனிப்பட்ட நலனுக்காக, தமிழகத்தின் ஒரு பெரும் சமூகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குப் பலி கொடுக்கப் போகிறீர்கள்?

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே, வெறுப்பில் பிறந்து எழுபது ஆண்டுகளாக தமிழகத்தில் வெறுப்பை மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கும் உங்கள் கட்சி, தற்போது விதைத்துக் கொண்டிருப்பது சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடு என்னும் விஷ விதை. உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வளர்த்து வரும் இந்த விஷ செடி, எம் தமிழக மக்களால் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.