நீட் தேர்வில் தோல்வியால் மாணவர் தற்கொலை- வேதனையில் தந்தையும் தற்கொலை
1 min read
Student commits suicide due to failure in NEET exam-Father also commits suicide in agony
14.87.2023
சென்னையில் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் மாணவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்திருக்கிறது.
நீட்தேர்வு
குரோம்பேட்டை குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர். புகைப்படக் கலைஞரான இவருக்கு 19 வயதில் ஜெகதீஸ்வரன் என்ற மகன் இருந்தார். மனைவி பிரிந்து சென்ற நிலையில், செல்வசேகர் தன்னுடைய மகனை அதிக பாசத்துடன் வளர்த்து வந்திருக்கிறார். 2021-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ பிரிவில் 12-ம் வகுப்பு முடித்த ஜெகதீஸ்வரன் மருத்துவ படிப்பின்மீது கொண்ட மிகுதியான ஆர்வம் காரணமாகத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வந்திருக்கிறார்.
இதற்காகப் பயிற்சி மையத்தில் பயிற்சியும் பெற்றுவந்திருக்கிறார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காததினால் அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், அடுத்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் சீட் வாங்குவேன் என்று தன் தந்தையிடம் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கு நீட் பயிற்சி பெற மையத்துக்குப் பணமும் கட்டியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் ஜெகதீஸ்வரனுடன் நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவர்கள் சிலர் இம்முறை பொறியியல் படிக்கச் சென்றுவிட்டனர். மேலும் சிலர் தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்கச் சென்றுவிட்டனர். இதனால், கடுமையான குழப்பத்திலிருந்திருக்கிறார். ஒருவித விரக்தியிலிருந்த அவர் நேற்றைய முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார்.
சம்பவமறிந்து வந்த போலீஸார் மாணவரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். நீட் தேர்வில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் அளவுக்கு போதுமான மதிப்பெண் கிடைகாததன் காரணமாக மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெகதீஸ்வரனுக்கு அனைத்து இறுதிச்சடங்கையும் செய்துமுடித்துவிட்டு செல்வசேகர் உறவினர்களுடன் வீட்டுக்கு வந்து உறங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், அவர்கள் குடியிருக்கும் வீட்டில் மாடி காலியாக இருந்திருக்கிறது. பாசத்துடன் வளர்த்த மகன் உயிரிழந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாது கடுமையான மன வேதனையிலிருந்திருக்கிறார் செல்வசேகர். இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் மாடியிலுள்ள அறையில் செல்வசேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் அறிந்து வந்த போலீஸார் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மகன் இறந்த நிலையில், செல்வசேகர் ‘நீட் தேர்வுக்கு எதிராக எனது போராட்டத்தைத் தொடங்கத் தயார்’ என்று அவர் பேசியிருந்ததது குறிப்பிடத்தக்கது.